நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியாகினர்.
நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியாகினர்.
என்ஜினீயர்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள அக்கியம்பட்டியை சேர்ந்தவர் செங்கோடன். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் கவின் (வயது 22). என்ஜினீயர். இவர் நேற்று முன்தினம் இரவு நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடி அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கவினின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கவின் படுகாயம் அடைந்தார். மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சிராஜூதீன் (39), ரியாஜூதீன் (17) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
2 பேர் பலி
இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கவினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதேபோல் சிராஜூதீன் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். ரியாஜூதீனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.