மல்லூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து தாய்- மகன் பலி-மாமனார்- மருமகள் படுகாயம்

மல்லூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் தாய்- மகன் பரிதாபமாக இறந்தனர். மாமனார்- மருமகள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-08-12 22:17 GMT

பனமரத்துப்பட்டி:

திருச்செந்தூர் கோவில்

சேலம் அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகம் பகுதியில் பெருமாள் கோவில் ரோடு முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 55). வீட்டில் வைத்தே ஆயுர்வேத பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவருடைய மனைவி மீனாட்சி (48), மகன் அருண் (28) மருமகள் கிருத்திகா (20). அருணும், கிருத்திகாவும் சென்னையில் பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கிருந்து புறப்பட்டு சேலத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை அருண் ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை 6.15 மணி அளவில் கார் மல்லூரை அடுத்த சந்தியூர் அருகே வந்தது.

தாய்- மகன் சாவு

அப்போது நிலைதடுமாறிய கார், திடீரென அருணின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. காருக்குள் இருந்தவர்கள் அய்யோ, அம்மா என்று அபய குரல் எழுப்பினர். கார் சாலை ஓரத்தில் நின்ற மரத்தில் பயங்கரமாக மோதி அங்கிருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. கார் ஓட்டிய அருண், அவருடைய தாய் மீனாட்சி இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். கந்தசாமி, அவருடைய மருமகள் கிருத்திகா இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். காயங்களுடன் கிடந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அருண், மீனாட்சி இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரை பறித்த தூக்கம்

விபத்து குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், அருண் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளதாகவும், அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதும் தெரிய வந்தது. திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் போது தாய்- மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்