தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர் சாலை விபத்தில் பலி

ஊத்துக்குளி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர் சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-11 18:17 GMT

ஊத்துக்குளி

ஊத்துக்குளி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர் சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார்.

பெண் ஊழியர்

ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன்பாளையம் ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 32) இவர் ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அளவையாளராக வேலை பார்த்து வந்தார்.

ராஜேஸ்வரி நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பல்லகவுண்டன்பாளையம் பகுதியிலிருந்து ஊத்துக்குளி நோக்கி வந்து கொண்டிருந்தார். புத்தூர்பள்ளபாளையம் பிரிவு அருகே செயல்படும் ஒரு பனியன் நிறுவனத்தின் அருகே வந்தபோது எதிர் திசையில் ஊத்துக்குளியில் இருந்து விஜயமங்கலம் நோக்கிச் சென்ற திவாகர் என்பவரது மோட்டார் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதியது.

பரிதாப சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேஸ்வரிக்கு தலையில் பலத்த அடிபட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். விபத்தில் சிறு காயத்துடன் உயிர் தப்பிய திவாகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜேஸ்வரி உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்