வெவ்வேறு விபத்துகளில் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் பலியாகினர்.
ஓசூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஜி.டி.நெல்லூர் அருகே எஸ்.எஸ்.குண்டா திண்டரகப்பள்ளியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் ஹேம்நாத் (வயது 23). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் ஓசூர் வந்த ஹேம்நாத் ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மூக்கண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ஹேம்நாத் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூரில் பெங்களூரு- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மூக்கண்டப்பள்ளி ஹில்ஸ் ஓட்டல் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று முன்தினம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.