கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வடமாநில வாலிபர் கைது

கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வடமாநில வாலிபர் கைது

Update: 2022-09-15 18:45 GMT

சீர்காழியில், நகைக்கடை அதிபர் மனைவி-மகன் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நகைக்கடை அதிபர் மனைவி-மகன் கொலை

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி(வயது 51). இவர் தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ெரயில்வே ரோட்டில் வசித்து வந்தார். சீர்காழி அருகே உள்ள தருமகுளத்தில் நகை மற்றும் அடகு கடை நடத்தி வந்தார்.

கடந்த ஆண்டு(2021) ஜனவரி மாதம் 27-ந்தேதி அதிகாலையில் தன்ராஜ் சவுத்ரி என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தன்ராஜ் சவுத்ரியின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

என்கவுண்டர்

பின்னர் தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மருமகள் நேஹல் ஆகிய இருவரையும் கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த சுமார் 12½ கிலோ நகைகள் மற்றும் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் எடுத்துக்கொண்டு எருக்கூர் கிராமத்தில் உள்ள சவுக்கு தோப்பு காட்டில் பதுங்கி இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நகை-பணத்துடன் பதுங்கி இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மஹிபால் சிங் என்பவரை என்கவுண்டர் செய்தனர்.

கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவு

மேலும் தலைமறைவாக இருந்த ராஜஸ்தானை சேர்ந்த மணீஷ், ரமேஷ் பட்டேல் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த கருணாகராம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மணீஷ் என்பவர் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

வடமாநில வாலிபர் கைது

இந்த நிலையில் நேற்று மணீஷ் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சென்னைக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கு பதுங்கி இருந்த மணீஷ் என்பவரை பிடித்து கைது செய்து நேற்று சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்