மதுரை, மேலூர் பகுதியில் கிரானைட் குவாரி ஏலத்தை கைவிடுக - முத்தரசன் வலியுறுத்தல்

மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பொதுமக்கள், காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-10-27 14:45 GMT

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் உரிமம் பெறாத, சட்ட விரோத கிரானைட் தொழிலில் பெரும் ஊழல் நடந்ததை நாடறியும். இது தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்திய ஆட்சிப் பணி அதிகாரி உ.சகாயம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணைய விசாரணை பல அதிர்ச்சியான தகவல்களை கண்டறிந்தது.

இதில் 1.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயற்கை வளம் கொள்ளை போயிருப்பதை ஆதாரப்பூர்வமாக உறுதி செய்து தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக கிரானைட் குவாரிக்கு உரிமம் வழங்குவதற்கு தடை விதித்து 2012 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. கிரானைட் முறைகேடு தொடர்பாக மேலூர் பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவைகள் கோர்ட்டு விசாரணையில் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் அண்மையில் மேலூர் வட்டம் சேக்கிப்பட்டி, அய்யாப்பட்டி, திருச்சுனை உள்ளிட்ட கிராமங்களில் பல வண்ண குவாரிகள் அமைக்க தமிழ்நாடு அரசின் கனிம வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த குவாரிகள் உரிமம் தொடர்பாக 31.10.2023 ஆம் தேதி ஏல அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.

மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பொதுமக்கள், 26.10.2023 ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பகுதியில் குவாரிகள் அமைப்பதற்கான தேவை குறித்து அரசு தரப்புப் பிரதிநிதிகள் நடத்திய பேச்சு வார்த்தையால், போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த இயலவில்லை. இந்தப் போராட்டத்தில் நேரடியாக தலையிட்டு, கிரானைட் குவாரி ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என முதல்-அமைச்சரை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்