ஆடிக்கிருத்திகை திருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கும் நிலையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறியவும், போக்குவரத்தை கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-08-07 09:41 GMT

ஆடிக்கிருத்திகை திருவிழா

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று(திங்கட்கிழமை) தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணன், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் ஆகியோர் நேற்று முன்தினம் திருத்தணி முக்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்

இந்நிலையில் நேற்று பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது :-

ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா பாதுகாப்பிற்காக திருத்தணி நகர் முழுவதும் 1,600-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

நகரின் முக்கிய இடங்களில் 250 கண்காணிப்பு கேமராக்களும், தேவையான இடங்களில் மின் விளக்குகளும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள 20 இடங்களில் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க...

மேலும் காவல்துறை சார்பில் 3 டிரோன் கேமராக்கள் மூலம் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மலைக்கோவில் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடுகின்ற பகுதிகளில் 40 குற்றபிரிவு போலீசார் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நகரின் வெளியே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோவிலுக்கு அருகாமையில் செல்வதற்காக 40 ரூபாய் கட்டணத்தில் ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளது.

ஆடிக்கிருத்திகை விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கு தடையின்றி வந்து செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீஸ் தரப்பில் செய்யப்பட்டுள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்