சதுரகிரியில் நாளை ஆடி அமாவாசை திருவிழா
சதுரகிரியில் நாளை, ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.
வத்திராயிருப்பு,
சதுரகிரியில் நாளை, ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.
ஆடி அமாவாசை திருவிழா
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.
தாணிப்பாறை விலக்கில் இருந்து அடிவாரப்பகுதி வரை பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு 8 இடங்களில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகையை கண்காணிக்க தாணிப்பாறை விலக்கு, பஸ்நிறுத்தம், மாவூற்று உதயகிரிநாதர் கோவில், தாணிப்பாறை வனத்துறை கேட் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவக்குழுவினர்
மலைப்பகுதியில் பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக்குழுவினர் தாணிப்பாறை வனத்துறை கேட், விநாயகர் கோவில், சங்கிலிபாறை, கோண தலைவாசல், வாகை மரம், சின்ன பசுக்கிடை, பிலாவடி கருப்பசாமி கோவில், சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில் உள்ளிட்ட இடங்களில் மருத்துவக்குழுவினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பக்தர்கள் ஏறக்கூடிய மலைப்பாதையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணி
நீரோடை பகுதிகளில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் 400-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தாணிப்பாறை அடிவாரப்பகுதி மற்றும் பக்தர்கள் தங்கக்கூடிய தோப்புகள், மாவூற்று உதயகிரிநாதர் கோவில், கோவில் வளாகப் பகுதி மற்றும் பக்தர்கள் நடந்து செல்லக்கூடிய மலைப்பாதைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் இரவில் கோவில் வளாகப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி இல்லை. நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பஸ்கள்
பக்தர்கள் சாமி தரிசனம் முடிந்தவுடன் தாணிப்பாறை அடிவார பகுதிக்கு கீழே இறங்க வேண்டும் என வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பக்தர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக அடிவாரப்பகுதியில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆடி அமாவாசையை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடு பணிகளை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நேற்று ஆய்வு செய்தார்.
கூடுதல் நேரம் அனுமதி வேண்டும்
சதுரகிரி கோவிலுக்கு மலை ஏறி செல்ல காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இந்த நேரம் போதுமானதாக இல்லை. ஆதலால் கூடுதல் நேரம் அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.