வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி நாளை மறுநாள் தொடங்குகிறது
குமரி மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி நாளை மறுநாள் தொடங்குகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி
நாளை மறுநாள் தொடங்குகிறது.
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம்பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலோ அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6 பி-யை பூர்த்தி செய்து கொடுத்தோ, தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ -சேவை மையத்தினை அணுகியோ தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.