தூத்துக்குடியில் 2பெண்களிடம் 20 பவுன் சங்கிலி பறித்த வாலிபர் சிக்கினார்

தூத்துக்குடியில் 2பெண்களிடம் 20 பவுன் சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-27 18:45 GMT

தூத்துக்குடியில் 2 பெண்களிடம் 16 பவுன் தங்க சங்கிலிகளை பறித்த வாலிபரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தங்க சங்கிலி பறிப்பு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சேர்ந்தவர் சித்திரைபாபு. இவருடைய மனைவி சாரதா (வயது 40). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 24-ந் தேதி இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற ஒரு மர்ம நபர் திடீரென சாரதா கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கசங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

இதேபோன்று கடந்த அக்டோபர் மாதம் தூத்துக்குடி கே.டி.சி.நகரில் அமுதா என்பவர் கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பி சென்று விட்டார்.

கைது

இந்த சம்பவங்கள் தொடர்பாக தாளமுத்துநகர் மற்றும் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் உத்தரவின்பேரில் தனிப்படை ஏட்டுக்கள் மாணிக்கம், சாமுவேல், திருமணி, செந்தில், மகாலிங்கம், முத்துப்பாண்டி உள்ளிட்டோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், இந்த பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர், குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகன் பரத் (20) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் பரத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 பவுன் நகைகளையும் மீட்டனர். மேலும் அவர் பல வழிப்பறியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த பின்னணியில் தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்