திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் சிக்கினார்

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் சிக்கினார்.

Update: 2023-01-18 19:20 GMT

திண்டுக்கல் அருகே இரண்டலபாறை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் டென்சிங் பிரபு (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 7-ந்தேதி வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த டென்சிங் பிரபு, இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபரை மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். இதற்கான குறுஞ்செய்தி டென்சிங் பிரபுவின் செல்போனுக்கு வந்தது. இதையடுத்து அதை துருப்புச்சீட்டாக வைத்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அதில், பெரியகுளத்தை சேர்ந்த மணி மகன் நாகராஜ் (20) என்பவர் டென்சிங் பிரபுவின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்