சாலையோரம் நின்ற லாரி தானாக சென்று வீட்டுக்குள் புகுந்ததில் தொழிலாளி பலி

திண்டுக்கல் அருகே சாலையோரத்தில் நின்ற லாரி, தானாக நகர்ந்து சென்று வீட்டுக்குள் புகுந்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி, மகன்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-09-13 18:09 GMT

கூலித்தொழிலாளி

திண்டுக்கல் அருகே, மதுரை சாலையோரத்தில் தோமையார்புரம் ஏ.டி.காலனி உள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 37). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி பிரேமா (32). இந்த தம்பதிக்கு ரித்தீஷ் (10), ரியாஸ் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ஜஸ்டின் தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். கணவன்-மனைவி 2 பேரும் தரையிலும், 2 மகன்கள் கட்டிலிலும் படுத்திருந்தனர். இவர்கள், அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

25 டன் அரிசி மூட்டைகள்

இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து, தேனிக்கு 25 டன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பழனி (53) ஓட்டினார்.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் திண்டுக்கல் அருகே லாாி வந்து கொண்டிருந்தது. தேனி பைபாஸ் சாலைக்கு செல்வதற்கு பதிலாக, டிரைவர் மதுரை பைபாஸ் சாலைக்கு லாரியை கொண்டு வந்து விட்டார். இதனால் அவர், திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையோரத்தில் தோமையார்புரம் அருகே லாரியை நிறுத்தினார்.

வீட்டுக்குள் புகுந்த லாரி

முதல் கியர் போட்டப்படி லாரி நிறுத்தப்பட்டிருந்தது. லாரியை விட்டு பழனி கீழே இறங்கினார். அங்கு நின்றவர்களிடம், தேனிக்கு செல்லும் சாலை குறித்து அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

லாரியை நிறுத்தியிருந்த இடம், சற்று சாய்வாக இருந்தது. மேலும் 25 டன் எடை கொண்ட அரிசி இருந்ததால், லாரி தானாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. அங்கிருந்த இரும்பு தடுப்பில் (பேரிகார்டர்) லாரி மோதி, பள்ளத்தை நோக்கி இறங்கியது.

இதனைக்கண்ட பழனி மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். லாரியை நிறுத்த பழனி முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. சாலையோரத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள ஜஸ்டின் வீட்டுக்குள் லாரி புகுந்து நின்றது.

பரிதாப சாவு

இந்த விபத்தில், வீட்டின் சுவர் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டுக்குள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த ஜஸ்டின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி பிரேமா மற்றும் 2 மகன்களும் படுகாயம் அடைந்தனர்.

அதிகாலையில் அரங்கேறிய இந்த விபத்து குறித்து, திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் பிரேமா மற்றும் அவரது 2 மகன்களையும் மீட்டனர்.

பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் உயிரிழந்த நிலையில் ஜஸ்டின் உடலும் மீட்கப்பட்டது.

போலீஸ் விசாரணை

இதற்கிடையே திண்டுக்கல் தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ஜஸ்டின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் பழனி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி தானாக நகர்ந்து வீட்டுக்குள் புகுந்ததில் தொழிலாளி இறந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்