அக்கினி குண்டத்தில் தவறி விழுந்த பெண் படுகாயம்

பேரளத்தில், தீ மிதி திருவிழாவில் அக்கினி குண்டத்தில் தவறி விழுந்த பெண் படுகாயமடைந்தார். அவரை காப்பாற்ற முயன்ற வாலிபர் காயமடைந்தார்.

Update: 2023-02-11 18:45 GMT

நன்னிலம்:

பேரளத்தில், தீ மிதி திருவிழாவில் அக்கினி குண்டத்தில் தவறி விழுந்த பெண் படுகாயமடைந்தார். அவரை காப்பாற்ற முயன்ற வாலிபர் காயமடைந்தார்.

தீமிதி திருவிழா

திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இதற்காக கோவில் எதிரே உள்ள இடத்தில் அக்கினி குண்டம் தயார் செய்யப்பட்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் பேரளம் மட்டுமன்றி அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றும் வகையில் தீ மிதித்தனர்.

அக்கினி குண்டத்தில் விழுந்தார்

அப்போது திருச்சி பிருந்தாநகர் பகுதியில் இருந்து தீ மிதிப்பதற்காக செந்தாமரைசெல்வி (வயது35) என்கிற பெண் ேகாவிலுக்கு வந்துள்ளார். அக்கினி குண்டத்தில் அவர் இறங்கிய போது நிலை தடுமாறி தீயில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த செந்தாமரைச்செல்வி அலறி துடித்தாா்.

உடனே அருகில் இருந்தவர்கள் செந்தாமரைச்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை மீட்கும் போது பேரளம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. கோவில் திருவிழாவில் அக்கினி குண்டத்தில் பெண் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பேரளம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்