மலை ரெயிலை வழிமறித்த காட்டு யானை
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயிலை காட்டு யானை வழிமறித்தது.
குன்னூர்,
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயிலை காட்டு யானை வழிமறித்தது.
மலை ரெயில்
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சமவெளி பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதனால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குன்னூர் பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன. மேலும் குன்னூரில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், அந்த பழங்களை ருசிக்கவும் யானைகள் முகாமிட்டு உள்ளன. இதற்கிடையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் அடர்லி, ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் யானைகள் முகாமிட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் புறப்பட்டு குன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ஹில்குரோவ் பகுதியில் ரெயில் வந்த போது, காட்டு யானை வழிமறித்தது. இதனால் ரெயில் சற்று தொலைவிற்கு முன்பாக நிறுத்தப்பட்டது.
சுற்றுலா பயணிகள் அவதி
இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் மலை ரெயில் ½ மணி நேரம் தாமதமாக குன்னூருக்கு புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பந்தலூர் அருகே நெலாக்கோட்டை-விலங்கூர் சாலையோரத்தில் நேற்று முன்தினம் காட்டு யானை படுத்திருந்தது. பின்னர் அந்த யானை விலங்கூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அங்கிருந்து நெலாக்கோட்டை பகுதி வரை சாலையில் உலா வந்தபடி சென்றது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். நேற்று பாட்டவயல், கரியசோலை செல்லும் சாலையில் காட்டு யானை வாகனங்களை வழிமறித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ், வனக்காப்பாளர் மில்டன் பிரபு உள்ளிட்டோர் யானையை விரட்டினர். ஊருக்குள் புகுந்து யானை அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால், ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.