உத்தமபாளையம் அருகே பட்டப்பகலில் துணிகரம்:ரூ.10 கோடி கேட்டு தொழிலதிபர் காரில் கடத்தல்:4 பேர் கொண்ட கும்பலிடம் விசாரணை

உத்தமபாளையம் அருகே ரூ.10 கோடி கேட்டு தொழிலதிபர் காரில் கடத்தி செல்லப்பட்டார்.

Update: 2023-03-14 18:45 GMT

முட்டை வியாபாரம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் அதிசயம் (வயது 68). இவர் மாவட்டம் முழுவதும் கோழிக்கறி மற்றும் முட்டை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். மேலும் வாழை மற்றும் திராட்சை விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். தினந்தோறும் இவர், ராயப்பன்பட்டியில் இருந்து ஆனைமலையன்பட்டியில் உள்ள திராட்சை தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.

கடந்த ஒரு வாரமாக அவர் தோட்டத்திற்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் தோட்டத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் ராயப்பன்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அவரது திராட்சை தோட்டம் அருகே உள்ள சண்முகா நதி கால்வாய் பகுதியில் வந்தபோது, கார் ஒன்று நின்றது.

காரில் கடத்தல்

அப்போது திடீரென காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளை உதைத்து கீேழ தள்ளினர். பின்னர் அதிசயத்தை காரில் குண்டுக்கட்டாக தூக்கிபோட்டு கடத்தி சென்றனர். அப்போது அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினார். இந்த சத்தம் கேட்டதும் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தோட்டதொழிலாளி பாலமுருகன் என்பவர் காரின் பின்னால் சிறிது தூரம் ஓடினார். ஆனால் அந்த கார் மின்னல் வேகத்தில் சென்றது.

இதையடுத்து அவர், அதிசயம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அதிசயத்தின் உறவினர்கள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அவரது உத்தரவின்படி, உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி, இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிசயத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சோதனை சாவடிகளும் உஷாா்படுத்தப்பட்டது. போலீசாரும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

வாகன தணிக்கை

அதன்படி ஆண்டிப்பட்டி சோதனை சாவடியில் ஆண்டிபட்டி க.விலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்ஷா மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை சந்தேகத்தின்ேபரில் போலீசார் மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது.

இதையடுத்து போலீசார் ஜீப்பில் பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மர்ம கும்பல் ஓடும் காரில் இருந்து அதிசயத்தை கீழே தள்ளி விட்டனர். பின்னர் கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அதிசயத்தை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்

இதையடுத்து போலீசார் காரை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர். அதன்பின்னர் காரில் இருந்த மதுரையை சேர்ந்த 4 பேரையும் பிடித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மர்ம கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட தொழிலதிபர் அதிசயத்திடம் கேட்டபோது, என்னை காரில் கடத்தி சென்ற போது கண்களை துணியால் மூடி கட்டினர். பின்னர் எனது பையில் இருந்த ஏ.டி.எம்.கார்டை பறித்து கொண்டனர். மேலும் ரூ.10 கோடி தர வேண்டும் இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று தொடர்ந்து மிரட்டினர். போலீசார் வாகனம் பின் தொடர்ந்து வருவதை அறிந்த மர்மகும்பல் என்னை ஓடும் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதனால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்றார்.

இதற்கிடையே அதிசயம் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்த சங்கரலிங்கம் (50) என்பவர் நேற்று மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்த கடத்தல் சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்