காட்டாங்கொளத்தூரில் சாலையோரம் நின்ற பஸ் மீது லாரி மோதல்; டிரைவர் படுகாயம்
காட்டாங்கொளத்தூரில் சாலையோரம் நின்ற பஸ் மீது லாரி மோதலில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி சென்னை நோக்கி நேற்று விடியற்காலை வந்து கொண்டிருந்தது. காட்டாங்கொளத்தூர் ரெயில் நிலையம் அருகே வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரமாக நின்று கொண்டிருந்த தனியார் நிறுவன பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ் சாலை ஓரமாக இருந்த மின் கம்பத்தில் மோதி அருகில் இருந்த வீட்டின் மீது மோதி நின்றது. இதில் மின்கம்பம் உடைந்து மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்தது. அப்போது அந்த வழியாக யாரும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்தில் மினி லாரி முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. மினி லாரி டிரைவர் பால்பாண்டி பலத்த காயமடைந்து வண்டியிலே சிக்கிக் கொண்டார்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயத்துடன் மினி லாரியில் சிக்கிக் கொண்ட டிரைவர் பால்பாண்டியை சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர் தற்போது செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.