குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த 2 வாலிபர்கள் விபத்தில் பலி

நாங்குநேரி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில், குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த 2 வாலிபர்கள் பலியானார்கள். மேலும் 3 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-07-16 20:10 GMT

குற்றாலத்துக்கு...

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சேர்மன் தெருவைச் சேர்ந்தவர் ஆஷிக் அலி. இவருடைய மகன் ஷேக் அப்துல்லா (வயது 25). இவர் அப்பகுதியைச் சேர்ந்த தன்னுடைய நண்பர்கள் 5 பேருடன் குற்றாலத்துக்கு காரில் சுற்றுலா வந்தார். பின்னர் அவர்கள் இங்கிருந்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவில் தங்களது ஊருக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

லாரி மீது கார் மோதல்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கிருஷ்ணன்புதூர் அருகில் நாற்கரசாலையில் சென்றபோது, அங்கு சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதியது. கண்இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரை ஓட்டி வந்த ஷேக் அப்துல்லா, அவருடைய நண்பரான காதர் மகன் அமீர் அப்பாஸ் (25) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

3 பேருக்கு தீவிர சிகிச்சை

மேலும் காரில் இருந்த அகமது பாட்ஷா (23), செய்யது அகமது பாகுஷா (23), ஹசாரி (21) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இறந்த ஷேக் அப்துல்லா, அப்பாஸ் ஆகியோரது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காரில் இருந்த மற்றொரு நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

டிரைவரிடம் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இருந்து மின்கம்பங்களை ஏற்றிய லாரி நேற்று முன்தினம் இரவில் நெல்லை நோக்கி சென்றபோது, நாங்குநேரி அருகே கிருஷ்ணன்புதூர் அருகில் டயர் பஞ்ரானது. இதையடுத்து லாரியை சாலையோரமாக நிறுத்திய டிரைவர் பஞ்சரான டயரை மாற்ற ஏற்பாடு செய்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவரான மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த லட்சுமணனிடம் (59) போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்