ஒரு டன் ரேஷன் அரிசியை மினிலாரியில் கடத்திய 5 பேர் கைது

விளாத்திகுளம் அருகே ஒரு டன் ரேஷன் அரிசியை மினிலாரியில் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-21 11:26 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே மினி லாரியில் ஒரு டன் ரேஷன் அரிசியை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் வாகன சோதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் மற்றும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து போலீசார் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சூரங்குடியில் இருந்து விளாத்திகுளம் செல்லும் வழியில் குமாரசக்கனாபுரம் பகுதியில் சிலர் வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த சாலையில் வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

5 பேர் கைது

அப்போது அந்த மினி லாரியில் ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த மினி லாரியில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் மதுரையை சேர்ந்த சின்னப்பாண்டி (35), பழனி (35), சாயல்குடியை சேர்ந்த முருகன் மகன் சரவணன் (24), கருப்பசாமி மகன் ரெங்கசாமி (55), மதுரையை சேர்ந்த மகாராஜன் மகன் விக்னேஷ் ஆகியோர் என தெரிந்தது. இது தொடர்பாக விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளும், கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசாருக்கு பாராட்டு

அவற்றை விளாத்திகுளம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீசார், ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? எங்கே கடத்தி செல்லப்பட்டது? இந்த கடத்தல் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேஷன் அரிசி கடத்தியவர்களை கைது செய்த போலீசாரை விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்