ஏ.டி.எம். எந்திரத்தில் 'ஸ்கிம்மர்' கருவி பொருத்தி தகவல்கள் திருடிய ஜவுளி வியாபாரி கைது

சென்னை மயிலாப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் 'ஸ்கிம்மர்' கருவி பொருத்தி தகவல்களை திருடிய ஜவுளி வியாபாரியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவருடைய மகனை வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-08-20 20:53 GMT

சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் பிரபல நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரம் பழுதானபோது, அதனை வங்கி ஊழியர்கள் சரிபார்க்க சென்றனர்.

அப்போது அங்கிருந்த எந்திரத்தில், வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளில் உள்ள தகவல்களை திருடுவதற்காக பயன்படுத்தும் 'ஸ்கிம்மர்' கருவி பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்கள் இதுகுறித்து, மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மனோகர் (வயது 58) மற்றும் அவருடைய மகன் ஆனந்த் ஆகிய 2 பேரும் ஏ.டி.எம். எந்திரத்தில் 'ஸ்கிம்மர்' கருவியை பொருத்தியது தெரியவந்தது. தொடர்ந்து மனோகர் கைது செய்யப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

வண்ணாரப்பேட்டை பகுதியில் மனோகர், ஜவுளிக்கடை நடத்தி வந்தார். எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. மாறாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனோகர் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தார். அவருடைய மகன் ஆனந்த், அல்பேனியா நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். மனோகருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஆனந்த் மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்தியா திரும்பினார்.

டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அந்த நிறுவனத்தில் உள்ள தொடர்புகள் மூலம் 'ஸ்கிம்மர்' கருவி ஆனந்துக்கு கிடைத்தது. இதையடுத்து சென்னை வந்த ஆனந்த், தனது தந்தையுடன் அந்த வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் 'ஸ்கிம்மர்' கருவி பொருத்தியது தெரியவந்தது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆனந்த் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் பிடிபட்ட பின்னரே வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்