ரப்பர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

குலசேகரம் அருகே ரப்பர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1½ கோடி மதிப்பிலான ரப்பர் ஷீட்டுகள் எரிந்து சேதமடைந்தன.

Update: 2023-04-30 18:45 GMT

குலசேகரம்,

குலசேகரம் அருகே ரப்பர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1½ கோடி மதிப்பிலான ரப்பர் ஷீட்டுகள் எரிந்து சேதமடைந்தன.

ரப்பர் உலர் கூடம்

குலசேகரம் அருகே உள்ள நாகக்கோடு பகுதியில் வேளாண்மைத் துறையின் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் உள்ளது. இதன் வளாகத்தில் ரப்பர் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் விவசாயிகள், வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் என 1000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்குள்ள ரப்பர் உலர் கூடத்தில் ரப்பர் ஷீட்டுகள் உலர்த்திக் கொடுக்கப்படுகிறது. மேலும் ரப்பர் ஷீட்டுகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனையும் செய்யப்படுகிறது.

இங்கு உலர்த்துவதற்கு கொண்டு வரப்படும் ரப்பர் ஷீட்டுகளை விவசாயிகள் இருப்பு வைப்பதும் உண்டு. அதன்படி உலர் கூடத்திலும், அங்குள்ள குடோனிலும் சுமார் 75 டன் ரப்பர் ஷீட்டுகள் இருந்தது.

தீ விபத்து

இந்த நிலையில் நேற்று மதியம் 12 அளவில் இங்குள்ள உலர் கூடத்தில் திடீரென்று தீப்பிடித்தது. அங்கு உலர வைக்கப்பட்டிருந்த ரப்பர் ஷீட்டுகளில் தீ பரவி மள மளவென எரிய தொடங்கியது. அப்போது அங்கு பணியில் இருந்த 3 தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதற்கிடையே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட காக்கச்சல் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி விக்ரமன் (வயது 60) திடீரென மயக்கி விழுந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டனர்.

இந்த தீ விபத்து குறித்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குழித்துறை மற்றும் தக்கலை தீ அணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ கடுப்பாட்டுக்கு வரவில்லை. அத்துடன் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

ரூ.1½ கோடி சேதம்

தொடர்ந்து குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து தண்ணீர் நிரம்பிய 4 டாங்கர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீைய அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இறுதியில் சுமார் 3 மணி நேரம் போராடி தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அதற்கு உலர்கூடம் மற்றும் குடோன்களில் இருந்த 75 டன் ரப்பர் ஷீட்டுகளும் எரிந்து சாம்பலானது. மேலும், அங்கு இருந்த எந்திரங்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களும், கட்டிடத்தின் பெரும் பகுதியும் சேதமானது. சேத மதிப்பு சுமார் ரூ.1½ கோடி எனக்கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குலசேகரம் வருவாய் ஆய்வாளர் அமுதா, கிராம நிர்வாக அலுவலர் அனிதா மற்றும், ஒழுங்கு முறை விற்பனைக் கூட அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

இதுகுறித்து ரப்பர் உற்பத்தியாளர் கம்பெனியின் தலைவர் மனோகரன் கூறும் போது, ' தீ விபத்து காரணமாக ரப்பர் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும், நிறுவனத்திற்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என்றார்.

மற்றொரு குடோன் தப்பியது

தீ விபத்து நடந்த உலர் கூடத்தின் அருகே உள்ள மற்றொரு குடோனில் சுமார் 50 டன் ரப்பர் ஷீட் இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குடோனுக்கு தீ பரவவில்லை. இதனால் அங்கு இருந்த ரப்பர் ஷீட்டுகள் தப்பின.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குலசேகரம் தீ அணைப்பு நிலையத்திற்கு சிறிய தீ அணைப்பு வாகனமே உள்ளது. இந்த வாகனத்தின் மூலம் தீயை விரைவாக அணைக்க முடியவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே குலசேகரம் தீ அணைப்பு நிலையத்திற்கு பெரிய தீ அணைப்பு வாகனம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ரப்பர் உலர் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்