கம்பத்தில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: 19 வாகனங்கள் எரிந்து நாசம்

கம்பத்தில் வாகன காப்பகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 வாகனங்கள் எரிந்து நாசமாகின.

Update: 2022-08-13 17:01 GMT

வாகன காப்பகம்

தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் தெரு தண்ணீர் தொட்டி அருகே சவுடம்மன் கோவில் வளாகத்தில் வாகன காப்பகம் ஒன்று உள்ளது. இங்கு கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். அதன்படி நேற்று 65 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஜீப் ஒன்றில் ஹாரன் சத்தத்துடன் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து உடனே அங்கிருந்த காவலாளி ஞானசேகரன் ஓடி சென்று தீயை அணைக்க முயன்றார். ஆனால் அவரால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் அவர் மின் இணைப்பை துண்டித்து விட்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.

19 வாகனங்கள் தீயில் எரிந்தன

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் கம்பம் மற்றும் உத்தமபாளையம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது மளமளவென தீப்பற்றி எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.

அதற்குள் அடுத்தடுத்து நின்ற ஜீப்களில் பரவி தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கேரள பதிவெண் கொண்ட 10 ஜீப்கள் உள்ளிட்ட 19 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

போலீசார் ஆய்வு

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, இன்ஸ்பெக்டர் லாவண்யா, குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இ்டத்திற்கு விரைந்தனர். இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை காரணமாக தமிழகத்தில் கேரள பதிவெண் கொண்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

இதனால் இடுக்கி மாவட்ட உளவுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்தர் தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் தீ பிடித்து எரிந்த வாகனங்களை ஆய்வு செய்தனர்.

பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது ஒரு வாகனத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அடுத்தடுத்த வாகனங்களில் தீப்பற்றி எரிந்துள்ளது.

காவலாளி மின் இணைப்பை துண்டிக்கவில்லை என்றால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்றனர். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வாகன காப்பகத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்