செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து - 10 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்

செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

Update: 2023-04-25 03:44 GMT

செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இந்த குடோன் இயங்கி வந்தது. இங்கு வடநாட்டு தொழிலாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்களிடம் இருந்து சேகரித்து, அதனை தரம் பிரித்து மறு சுழற்சி செய்வதற்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இந்த குரோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதயில் கரும்புகை மூட்டம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்குன்றம், மாதவரம், செம்பியம், அம்பத்தூர், ஆவடி, வண்ணாரப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து 25 தீயணைப்பு வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விடிய விடிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 10 மணிநேர போராட்டத்துக்கு பிறகு நேற்று காலை 10 மணி அளவில் குடோனில் எரிந்த தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

குடோன் அருகே உள்ள வீடுகளில் தொழிலாளர்கள் தங்கி இருந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாயின.

இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.

தீ விபத்தின்போது விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை மூட்டம் ஏற்பட்டதால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு லேசான மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்