தாம்பரம் அடுத்த திருநீர்மலையில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

தீயணைப்புத்துறையினர் சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-07-08 23:38 GMT

சென்னை,

சென்னை தாம்பரம் அடுத்துள்ள திருநீர்மலை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த குடோனில் நள்ளிரவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறி பின்னர் தீயானது மளமளவென எரியத் தொடங்கியுள்ளது.

இதைப் பார்த்த அருகிலுள்ள பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் சென்றதையடுத்து, அருகிலுள்ள மற்ற தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அசோக் நகர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்துள்ள 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் குடோன் தீ விபத்தால் திருநீர்மலை பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காற்று மாசு ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த குடோனில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் உள்ளே இருந்துள்ளனர். தீ பரவுவதற்கு முன்பே அவர்கள் உரிய நேரத்தில் வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்