வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீவிபத்து

ஆலங்குளத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

Update: 2022-10-22 18:45 GMT

ஆலங்குளம்: 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜா. இவர் ஆலங்குளம் மார்க்கெட் சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வருகிறார். அங்கு கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன.நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் ஐகோர்ட் மகாராஜா கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் திடீரென அவரது கடையில் தீப்பிடித்து எரிந்தது. அந்த கடையின் அருகில் பெட்ரோல் பங்க் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம், சுரண்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்