போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு
போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபரும், அதேபகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் 2 பேரும் தனிமையில் சந்தித்து பேசி பழகி வந்தனர். இதற்கிடையில் அந்த வாலிபர், இளம்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். ஆனால் அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வந்த நிலையில், அந்த வாலிபர் மறுத்து விட்டார். இதுபற்றி இளம்பெண் கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், அந்த வாலிபரை நேற்று முன்தினம் வரவழைத்து விசாரித்தனர். பின்னர் மீண்டும் நாளை (அதாவது நேற்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் கூறி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று காலை அந்த வாலிபர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.