ஆவடி அருகே கால்வாயில் மூழ்கி இறந்ததாக கருதப்பட்ட வாலிபர் கொலை செய்யப்பட்டது அம்பலம்

ஆவடி அருகே கால்வாயில் மூழ்கி இறந்ததாக கருதப்பட்ட வாலிபர், குடிபோதை தகராறில் அவரது நண்பர்களால் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

Update: 2023-10-05 22:58 GMT

ஆவடி,

ஆவடி நந்தவனமேட்டூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சையத் யாசின் (வயது 24). இவர், கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி உடல் நலம் சரிஇ்ல்லாத தனது நண்பரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் மாயமானார். அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதுபற்றி ஏப்ரல் 29-ந் தேதி ஆவடி போலீசில் அவரது தந்தை சையத் சகாஜத் புகார் அளித்தார். அதில் திருமுல்லைவாயல் எட்டியம்மன் நகரில் வசிக்கும் பெயிண்டரான ஜான் (28) என்பவர் வீட்டுக்கு சென்ற தங்கள் மகன் அதன்பிறகு மாயமாகி விட்டதாக கூறி இருந்தார்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானிடம் விசாரித்தனர். அவர், சையத் யாசின் தன்னை பார்த்துவிட்டு உடனடியாக திரும்பி சென்றுவிட்டதாக கூறினார்.

கால்வாயில் பிணமாக கிடந்தார்

இதற்கிடையில் மாயமான சையத் யாசின், ஆவடி அடுத்த மோரை வெள்ளானூர் அருகே உள்ள கிருஷ்ணா கால்வாயில் பிணமாக மிதந்தார். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், அவரது உடலை மீட்டு விசாரணை செய்தனர். அவர் கால்வாயில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கருதினர். ஆனால் அப்போது போலீசாருக்கு அது சையத்யாசின் என்பது தெரியவில்லை.

அடையாளம் தெரியாத ஆண் சடலம் என்று வழக்குப்பதிவு செய்து அந்த பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியும் அடையாளம் தெரியவில்லை. இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு மாதமாக வைக்கப்பட்டு இருந்த சையத் யாசின் உடல் மே மாதம் 20-ந் தேதி உதவும் கரங்கள் மூலம் சென்னை மூலகோத்திரம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

கொலையானது அம்பலம்

இந்தநிலையில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு ஜான் மீது மீண்டும் சந்தேகம் எழுந்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிரமாக விசாரித்தனர். ேபாலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஜான் தனது நண்பர்களுடன் சேர்ந்து சையத் யாசினை கொலை செய்து கிருஷ்ணா கால்வாயில் உடலை வீசியதாக தெரிவித்தார். அதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜான் மற்றும் சையத் யாசின் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். ஏப்ரல் 16-ந் தேதி ஜான், சையத் யாசின் மற்றும் அவர்களுடைய நண்பர்களான திருமுல்லைவாயல் எட்டியம்மன் நகரை சேர்ந்த டில்லி பாபு என்ற தினேஷ் பாபு (24), ஆவடி அடுத்த மோரை நியூ காலனியை சேர்ந்த கவுதம் என்ற அரவிந்த் (24) ஆகிய 4 பேரும் சேர்ந்து ஆவடி அடுத்த மோரை வெள்ளானூர் அருகே உள்ள கிருஷ்ணா கால்வாய் ஓரம் அமர்ந்து மது அருந்தினர்.

3 பேர் கைது

அப்போது நண்பர்களுக்குள் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ஜான், தினேஷ்பாபு, கவுதம் 3 பேரும் சேர்ந்து சையத் யாசினை அடித்தனர். இதில் அவர் இறந்துவிட்டார். பின்னர் அவரது உடலை கால்வாயில் வீசிவிட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆவடி போலீசார் ஜான், தினேஷ் பாபு, கவுதம் ஆகிய 3 பேரையும் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி இறந்ததாக கருதப்பட்டு அனாதை பிணமாக அடக்கம் செய்யப்பட்ட வாலிபர், அவரது நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டு கால்வாயில் உடல் வீசப்பட்டதாக 6 மாதங்களுக்கு பிறகு தெரியவந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்