பெயிண்ட் அடிக்க வந்த வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது
கயத்தாறு அருகே பெயிண்ட் அடிக்க வந்த வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள மானம்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சண்முகராஜ் (வயது 34). இவர் தனியார் காற்றாலையில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் நெல்லை பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் தூய்மை மிக்கேல் தெருவை சேர்ந்த மோசஸ் மகன் பேரின்பராஜ் (37) உள்பட 4 பேர் கடந்த 3 நாட்களாக பெயிண்டிங் வேலை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் சண்முகராஜ் மனைவி, பீரோவில் இருந்து ரூ.2,500-ஐ எடுத்து சாமான்கள் வாங்குவதற்காக அவர்களிடம் கொடுத்தார். பின்னர் சாவியை பீரோவின் மேல் பகுதியில் வைத்துவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
நேற்று காலை சண்முகராஜூம், அவரது மனைவியும் வெளியூர் செல்ல புறப்பட்டனர். அப்போது சண்முகராஜ் மனைவி பீரோவை திறந்து பார்த்தபோது, அங்கிருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலி, ஒரு பவுன் பிரேஸ்லெட், 2 கிராம் கம்மல், ஒரு ஜோடி காதுமாட்டி உள்பட ரூ.1½ லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்தில் சண்முகராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் சண்முகராஜ் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, பேரின்பராஜ் நகைகளை திருடியது தெரியவந்தது. அவர் பீரோவின் மேல் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து நகைகளை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பேரின்பராஜை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து நகைகளையும் மீட்டனர்.