பொம்மை துப்பாக்கியை காட்டி வாலிபருக்கு மிரட்டல்

பொம்மை துப்பாக்கியை காட்டி வாலிபருக்கு மிரட்டல்

Update: 2023-02-25 18:45 GMT

துடியலூர்

கோவை அருகே பொம்மை துப்பாக்கியை காட்டி வாலிபருக்கு மிரட்டல் விடுத்த துணை நடிகர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

துணை நடிகர்கள்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மாங்கரை பகுதியை சேர்ந்தவர் சமீர் (வயது 30). இதேபோல் பாலக்காடு புத்தூர் கோவில் தெருவை சேர்ந்த கிஷோர் (23), திருநெல்லை கொல்லம் பகுதியை சேர்ந்தவர் திலீப் (23). இவர்கள் 3 பேரும் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் துணை நடிகர்களாக நடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று அவர்கள் 3 பேரும் பாலக்காட்டில் இருந்து ஊட்டி செல்வதற்காக கோவைக்கு காரில் வந்தனர். பின்னர் கவுண்டம்பாளையம் பகுதியில் காரை நிறுத்தி விட்டு மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த புதுக்கோட்டை மாவட்டம் திருவனவாசல் நடுத்தெருவை சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் அன்பு (23) என்பவர் நடுரோட்டில் நின்றி மது அருந்தியது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

மிரட்டல்

இதனால் சமீர், கிஷோர், திலீப் 3 பேரும் அன்புவிடம் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அன்புவிடம் காட்டி சுட்டு விடுவோம் என கூறி 3 பேரும் மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பு உடனடியாக துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

இதில் துணை நடிகர்கள் 3 பேரும் சினிமாவில் பயன்படுத்தப்படும் பொம்மை துப்பாக்கியை காட்டி அன்புவை மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து சமீர், கிஷோர், திலீப் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சினிமா துப்பாக்கி, கார் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரையும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்