வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சென்னையில் பிடிபட்டார்
வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்தவர்களின் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடியை சேர்ந்த அஜித்ஜோசப் (வயது 29) என்பவரது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
அதில் அஜித்ஜோசப்பை அவருடைய மனைவி கொடுத்த புகாரின்பேரில் வரதட்சணை கொடுமை வழக்கில் வயநாடு மானந்தவாடி போலீசார் கடந்த 1½ ஆண்டுகளாக தேடி வருவதும், இதுபற்றி விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுத்து இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அஜித்ஜோசப்பை வெளியில் விடாமல் ஒரு அறையில் தங்க வைத்தனர். இதுபற்றி கேரள மாநில போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். கேரள மாநில தனிப்படை போலீசார் சென்னை வந்து அஜித்ஜோசப்பை அழைத்துச்செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.