திருக்கழுக்குன்றம் அருகே 3 வயது குழந்தையை கடத்த முயன்ற வாலிபர்

திருக்கழுக்குன்றம் பகுதியில் 3 வயது பெண் குழந்தையை கடத்த முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து திருக்கழுக்குன்றம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்

Update: 2023-04-04 09:58 GMT

கடத்தல் முயற்சி

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த அடவிளாகம் கிராம பகுதியில் நேற்று காலை சாலையோரத்தில் 3 வயது பெண் குழந்தை ஒன்று விளையாடி கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மோட்டர் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பெண் குழந்தையிடம் சாக்லேட் ஒன்றை காண்பித்து அந்த குழந்தையை கூப்பிட்டு கொடுத்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் அந்த குழந்தையை முன்பக்கம் உட்கார வைத்து அழைத்து செல்ல முயன்றார். உடனே குழந்தை கத்தி அழுதது. குழந்தையின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்ததும் குழந்தையை அங்கேயே இறக்கி விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் அந்த நபர் வேகமாக சென்றார்.

வாலிபருக்கு தர்ம அடி

உடனே அந்த பகுதி மக்கள் அந்த வாலிபரை விடாமல் மோட்டார்சைக்கிள் மூலம் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு விரட்டி சென்று மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தையை கடத்த முயன்ற வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் அவர் திருப்போரூர் அடுத்த புங்கேரி கிராமத்தைச் சேர்ந்த சாந்தகுமார் (வயது 26) என்பது தெரிய வந்தது.

மேலும் இவர் இதுபோல வேறு ஏதேனும் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டாரா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்