நாட்டறம்பள்ளியை அடுத்த ஜெயந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் இவரது மகன் அன்பரசு (வயது 32). இவர்களுக்கு சொந்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தனது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்து இருந்தனர். இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிள் காணமால் போனது. உடனே தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது பட்டப் பகலில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து அன்பரசுவின் வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச்செல்வது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து அன்பரசு நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளை திருடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.