மாமியாரை கத்தியால் குத்திய வாலிபர்
நிலக்கோட்டை அருகே மாமியாரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நிலக்கோட்டை பெரியார்நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 32). இவருக்கும், மதுரை மாவட்டம் அய்யங்கோட்டையை சேர்ந்த செல்லப்பாண்டி மகள் பிரியா (30) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரியா, தனது தாய் பேச்சியம்மாளுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறினார். இதையடுத்து பேச்சியம்மாள் நேற்று முன்தினம் நிலக்கோட்டைக்கு வந்தார். அப்போது மாரிமுத்துவிடம் தகராறு குறித்து தட்டிக்கேட்டார். இதில், ஆத்திரமடைந்த அவர் மாமியார் என்று கூட பார்க்காமல் பேச்சியம்மாளை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பேச்சியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து செல்லப்பாண்டி, நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாரிமுத்துவை வலைவீசி தேடி வருகின்றனர்.