திருமணம் செய்ய இளம்பெண் மறுப்பு: தீக்குளித்து வாலிபர் தற்கொலை
திருமணம் செய்ய இளம்பெண் மறுத்ததால் தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே த.சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 29). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் இளம்பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த பெண் இவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சத்தியராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். பின்னர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்தியராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.