சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் ஏற்பட்டது.

Update: 2022-07-24 20:36 GMT

சாலையில் திடீர் பள்ளம்

திருச்சி காஜாமலை பகுதியில் இருந்து கலெக்டர் பங்களா வழியாக மன்னார்புரம் செல்லும் சாலையின் இடதுபுறம் காஜாமலை பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து சாலையில் ஆங்காங்கே சில அடிதூரத்துக்கு வெடிப்பு ஏற்பட்டது. பூகம்பம் வந்ததைப்போல் திடீரென ஏற்பட்ட பள்ளத்தை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே பாதாள சாக்கடை மெயின் குழாய் செல்லும் திறப்பானில் இருந்து சாக்கடை நீர் குபு, குபுவென சாலையில் ஏற்பட்ட பள்ளம் வழியாக வெளியே வந்த தெருவில் ஓடியது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று இரும்பு தடுப்புகளை வைத்து அந்த வழியாக கார் மற்றும் கனரக வாகனங்கள் செல்லாமல் தடுத்து நிறுத்தினர். இருசக்கர வாகனங்கள் மட்டும் சாலையின் ஒரு ஓரமாக அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

சீரமைக்கும் பணி

பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டு பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சேதம் அடைந்த சாலையையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணியை கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்தநிலையில் இந்த சாலை சமீபத்தில் தான் புதிதாக போடப்பட்டதாகவும், அதற்குள் இப்படி பெயர்ந்து பள்ளம் விழுந்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறினார்கள். மேலும், வழக்கமாக வாகனங்கள் அதிகமாக செல்லும் அந்த சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வாகனங்கள் குறைவாக சென்றதாகவும், இதனால் பள்ளம் ஏற்பட்டபோது, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் அந்த பகுதியினர் கூறினர்.

சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்