சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் சங்கிலி பறிப்பு

சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் சங்கிலி பறிப்பு

Update: 2023-06-04 18:45 GMT

முத்துப்பேட்டை அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் சங்கிலியை பறித்து சென்று 2 பேர் அலையாத்திக்காட்டில் பதுங்கினர். அவர்களை போலீசார் படகில் சென்று பிடித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள பின்னத்தூர் ஈ.சி.ஆர். சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். எடையூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் இவர் நேற்று முன்தினம் பணிக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் கண்ணன் மனைவி சங்கீதா, மகள் சிந்து ஆகியோர் தனியாக இருந்தனர்.

வெயில் தாக்கம் காரணமாக தாயும், மகளும் வீட்டின் மாடியில் உள்ள

முகப்பு பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் கண்ணன் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திடீரென அவரது வீட்டுக்குள் புகுந்தனர்.

8 பவுன் சங்கிலி பறிப்பு

பின்னா் அவர்கள் மாடிக்கு சென்று அங்கிருந்த சங்கீதாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மின்னல்வேகத்தில் தாங்கள் வந்த மோட்டார்சைக்கிளில் முத்துப்பேட்டை அலையாத்திகாட்டுக்குள் சென்று பதுங்கி கொண்டனர். கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றதால் அதிர்ச்சி அடைந்த தாயும் மகளும் செய்வது அறியாமல் திகைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை, எடையூர், பெருகவாழ்ந்தான் ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து ஏராளமான போலீசார் அலையாத்திகாட்டுக்கு படகு மூலம் சென்று மா்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும் போலீசார் சோர்ந்து விடாமல் அலையாத்திக்காட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தீவிரமாக ேதடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் அலையாத்திக்காட்டில் டிரோனை பறக்கவிட்டு மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுற்றிவளைத்து பிடித்தனர்

சுமார் 12 மணிநேரத்துக்கு பிறகு நள்ளிரவில் 12 மணி அளவில் அலையாத்திகாடு எல்லையில் உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு எம்.கே. நகர் அருகே செல்லும் பாமணி ஆற்றில் மர்மநபர்கள் 2 பேர் நீந்தி வருவதை கண்ட போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் வினோபா காலனி பகுதியை சேர்ந்த வில்லியம் மகன் தர்மதுரை (வயது20), போடிநாயக்கனூரை அடுத்த அணைக்கரை காந்தி சாலை பகுதியை சேர்ந்த முத்து மகன் நல்லவன் என்ற நல்லதம்பி (27) என்றும் இவர்கள் இருவரும் சேர்ந்து சிறப்பு சப்-இ்ன்ஸ்பெக்டர் கண்ணன் மனைவியிடம் நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.

கைது

இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் 8 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட தர்மதுரை மற்றும் நல்லதம்பியை போலீசார் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பட்டப்பகலில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் சங்கிலியை 2 பேர் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்