கிண்டி, செங்கல்பட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இறையன்பு ஆய்வு

கிண்டி, செங்கல்பட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

Update: 2023-05-21 21:54 GMT

சென்னை,

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தரத்திலான நவீன தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திட்டம் ரூ.2,877.43 கோடி செலவினத்தில் டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. 5 நீண்ட கால மற்றும் 23 குறுகிய கால புதிய தொழிற்பிரிவுகளில் வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் பயிற்சி தொடங்க உள்ளது.

இந்த திட்டத்துக்கான பணிமனை கட்டிடங்கள் அமைத்திட ஒவ்வொரு நிலையத்துக்கும் தலா ரூ.3.73 கோடி வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒவ்வொரு அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் ரூ.31 கோடி செலவில் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறுவப்பட்டுள்ளதை கிண்டி மற்றும் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று ஆய்வு செய்தார்.

அடுத்த மாதத்துக்குள்...

இந்த திட்டத்துக்கான கட்டுமான பணிகள் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும், செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முடிவு பெற்று தொடக்க விழாவுக்கு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் அமல்படுத்தப்படும் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் (ஜூன்) 30-ந்தேதிக்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆய்வின்போது, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனர் வீரராகவ ராவ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், பொதுப்பணித்துறை, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்