டீசல் கேனுடன் வந்த முதியவரால் பரபரப்பு

வீட்டுமனை பட்டா வழங்காததால் விரக்தி அடைந்த முதியவர் டீசல் கேனுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-22 18:17 GMT

வீட்டுமனை பட்டா வழங்காததால் விரக்தி அடைந்த முதியவர் டீசல் கேனுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, இலவச வீடு உள்ளிட்டவை தொடர்பாக 470 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

டீசல் கேனுடன் வந்த முதியவர்

அணைக்கட்டு தாலுகா புத்தூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் (வயது 65) என்பவர் மஞ்சப்பையுடன் மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பையை சோதனையிட்டனர்.

அதில் டீசல் கேன் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் ஒரே வீட்டில் 3 மகன்களுடன் வசித்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்துள்ளேன்.

ஆனால் இதுவரை வழங்கவில்லை. ஆனால் எங்கள் பகுதியில் வசிக்கும் 40 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

எனக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மக்கள் குறைதீர்வு கூட்டம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு வழங்கினேன்.

அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்வதற்காக டீசல் கேனுடன் வந்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் அவரை கலெக்டரிடம் அழைத்து சென்றனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் டீசல் கேனுடன் வந்த அர்ஜூனன் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் அங்கு சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கலெக்டர் முன்பு தர்ணா

பொன்னையை சேர்ந்த ஏகாம்பரம் என்பவர் வரிசையில் நின்று மனு கொடுக்க வந்தார். திடீரென அவர் கலெக்டர் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது ஏகாம்பரம் கூறுகையில், எனக்கு சொந்தமான இடத்தில் உள்ள சுவரை அகற்றிவிட்டு புதிதாக வீடு கட்ட உள்ளேன். ஆனால் அந்த சுவரை இடிக்க விடாமல் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தகராறு செய்கிறார்கள்.

இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது இடத்தில் உள்ள சுவரை அகற்றிவிட்டு புதிய வீடு கட்ட உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்.

அவரை சமாதானம் செய்த கலெக்டர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பள்ளிகொண்டா பேரூராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் தீபா கார்த்திகேயன் அளித்த மனுவில், பள்ளிகொண்டா வேப்பங்கால் பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான இடத்தை ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

பணி நியமன ஆணை

பாலமதியை சேர்ந்த மூதாட்டி காசியம்மாள் அளித்த மனுவில், எனது கணவர் சுப்பிரமணி குடும்ப தகராறு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

என்னுடைய 4 மகன்களில் ஒரு மகன் வீட்டை விட்டு என்னை வெளியேற்றி விட்டான். அதனால் நான் தங்க இடமின்றி சாப்பிட உணவின்றி கஷ்டப்பட்டு வருகிறேன். எனது வீட்டை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

குறைதீர்வு கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சத்துணவு திட்டத்தின்கீழ் கருணை அடிப்படையில் 3 பேருக்கு பணி நியமன ஆணை, மாற்றுத்திறனாளி குழந்தைகள் 5 பேருக்கு மருத்துவக்காப்பீடு அட்டைகளையும் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்