சென்ட்ரிங் தொழிலாளிக்கு கத்திக்குத்து

தவுட்டுப்பாளையம் அருகே சென்ட்ரிங் தொழிலாளியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-10-25 18:44 GMT

சென்ட்ரிங் தொழிலாளி

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே உள்ள கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 32). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. இந்தநிலையில் ராஜேந்திரன் வீட்டில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் மதன் (25) என்பவர் அப்பகுதிக்கு வந்துள்ளார்.

அப்போது ராஜேந்திரன் வீட்டின் முன்பு அவரது அக்காள் சித்ராவின் கணவர் சதாசிவத்துக்கு சொந்தமான லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது மதன் அந்த லாரியில் இருந்த டூல்சை எடுத்துக்கொண்டிருந்தார். இதை பார்த்த ராஜேந்திரன் அவரை தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கத்திக்குத்து

இதில் ஆத்திரமடைந்த மதன் தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கோழி சண்டைக்கு பயன்படுத்தப்படும் கத்தியை எடுத்து ராஜேந்திரனின் முதுகிலும், இடது பக்க வயிற்றிலும் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். வலிதாங்க முடியாமல் ராஜேந்திரன் சத்தம் போட்டு உள்ளார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜேந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய மதனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்