உயர்மின் அழுத்த மின்சார கம்பியில் இரும்பு பைப் உரசியதால் தீப்பொறி

சிவகாசியில் உயர்மின் அழுத்த மின்சார கம்பியில் இரும்பு பைப் உரசியதால் தீப்பொறி ஏற்பட்டது.

Update: 2023-04-07 20:16 GMT

சிவகாசி, 

சிவகாசியில் உயர்மின் அழுத்த மின்சார கம்பியில் இரும்பு பைப் உரசியதால் தீப்பொறி ஏற்பட்டது.

பஸ்நிலையம்

சிவகாசி மாநகராட்சியின் மையப்பகுதியில் பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இந்த பஸ் நிலையத்துக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கிறது. இந்தநிலையில் பஸ் நிலையத்தின் வெளியே மாநகராட்சி சார்பில் பல லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

வர்த்தக பயன்பாட்டுக்காக கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடம் கடந்த 6 மாதமாக மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கட்டிட கட்டுமான பணிக்காக இரும்பு சாரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தீப்பொறி

நேற்று காலை பஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்ற பஸ் ஒன்று அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. அப்போது சாரத்தில் இருந்த இரும்பு பைப்புகள் அவ்வழியாக சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பியில் உரசி தீப்பொறி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அப்பகுதி மக்கள் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்தி அப்பகுதியில் இருந்த இரும்பு பைப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட கட்டிட காண்டிராக்டருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த இரும்பு பைப்புகள் அங்கிருந்து அகற்றப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடு

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் உயர் மின்னழுத்த மின்சார கம்பி செல்லும் பாதையில் இரும்பு பைப்புகள் பயன்படுத்தக்கூடாது என விதி இருந்தும் விதிகளை மீறி கட்டிட காண்ட்ராக்டர் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யாமல் சாரத்திற்கு இரும்பு பைப்புகளை பயன்படுத்தியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட காண்டிராக்டருக்கு நோட்டீஸ் வழங்கியதாக மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்