தோட்டத்தில் ஒற்றை யானை முகாம்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோர தோட்டத்தில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Update: 2023-10-12 20:00 GMT

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோர தோட்டத்தில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

பலாப்பழ சீசன்

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம், கே.என்.ஆர். நகர், பர்லியார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பலா மரங்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை சீசன் இருக்கும். இதையொட்டி பலாப்பழங்களை ருசிக்க சமவெளி பகுதியில் இருந்து காட்டுயானைகள் வந்து, இங்கு கூட்டமாக முகாமிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த யானைகள் மலைரெயிலை மறிப்பது, குடிநீர் குழாய்களை உடைப்பது, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது பலாப்பழ சீசன் முடிவு பெற்றதால் சமவெளி பகுதிகளுக்கு காட்டு யானைகள் திரும்பி சென்று இருந்தன.

விரட்ட வேண்டும்

இதற்கிடையில் தற்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் பருவமழை காரணமாக வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளது. இதனால் யானைகளுக்கு தேவையான தீவனம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சமவெளி பகுதிகளில் இருந்து மீண்டும் யானைகள் இடம்பெயர்ந்து இந்த பகுதிகளுக்கு வருகிறது.

இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோர தோட்டத்தில் ஒற்றை யானை ஒன்று முகாமிட்டு உள்ளது. இதனால் பச்சை தேயிலை பறிக்கவோ, பிற கூலி வேலைக்கு செல்லவோ பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே வனத்துறையினர் இந்த யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்