திருத்தணி அருகே மணல் குவாரி ஊழியரை வெட்டி ரூ.25 லட்சம் கொள்ளை

திருத்தணி அருகே மணல் குவாரி ஊழியரை பட்டா கத்தியால் வெட்டி ரூ.25 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2023-09-10 13:06 GMT

ரூ.25 லட்சம்

பள்ளிப்பட்டு தாலுகா பெருமாநல்லூர் கிராமத்தில் அரசு அனுமதியுடன் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 41) என்பவருக்கு சொந்தமான பொக்லைன் எந்திரங்கள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல் இவருக்கு சொந்தமான பொக்லைன் எந்திரங்கள் திருச்சி, அரியலூர், நாமக்கல் போன்ற இடங்களில் உள்ள மணல் குவாரிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் பல்வேறு குவாரிகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் எந்திரங்களுக்கு தேவையான எரிபொருள் செலவிற்காக, பள்ளிப்பட்டு குவாரியில் வேலை செய்யும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முரளி (46) என்பவரிடம் மணல்குவாரியில் வசூலான பணத்தை எடுத்து வரும்படி ராஜ்குமார் கூறினார்.

இதனையடுத்து நேற்று மாலை முரளி பள்ளிப்பட்டு மணல்குவாரியில் வசூலான ரூ.24 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை சென்னையில் உள்ள ராஜ்குமாரிடம் ஒப்படைக்க வந்து கொண்டிருந்தார்.

கொள்ளை

சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருங்குளம் அருகே முரளி வந்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் முரளியை வழிமறித்தனர். பின்னர் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து முரளி கையை வெட்டி விட்டு அவர் வைத்திருந்த ரூ.24.75 லட்சம் பணத்தை பறித்து விட்டு தப்பினர்.

படுகாயம் அடைந்த முரளியை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு திருத்தணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் கனக்கம்மாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வழிபறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருத்தணியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்