புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்தை சுற்றுலா தலமாக மாற்ற கோரிக்கை

ஆலங்குடி அருகே வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்தை புனரமைத்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-14 18:30 GMT

புனித பெரிய நாயகி அன்னை ஆலயம்

ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட குழந்தை விநாயகர் கோட்டை ஊராட்சி தவளப்பள்ளம் கிராமத்தில் புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் இத்தாலிய நாட்டை சேர்ந்தவரும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட வீரமாமுனிவரால் கட்டப்பட்டதாகும்.

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தை தமிழக அரசு புதுப்பித்து சுற்றுலா தலமாக கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் கடந்த 10-ந் தேதி மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.

புனரமைக்க கோரிக்கை

இந்த ஆலயம் போர்ச்சுகீசிய கட்டிட கலையிலும், மாதாவின் சொரூபம் தமிழ் பண்பாட்டை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆலயத்தில் தமிழில் எழுதப்பட்ட பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த ஆலயம் தற்போது பாழடைந்து கிடக்கிறது.

எனவே இந்த ஆலயத்தை பழமை மாறாமல் புனரமைப்பு செய்து அனைத்து மக்களும் இவ்வாலயத்தை கண்டு களிக்கும் வகையில் சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முதற்கட்ட ஆய்வு

இதையடுத்து, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யாவின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட இளங்கலை வரலாற்று ஆராய்ச்சியாளரும், சுற்றுலாத்துறை அலுவலருமான முத்துசாமி மற்றும் குழுவினர் முதற்கட்ட ஆய்வு நடத்தினர்.

அப்போது தேவாலயத்தை சுற்றி நான்கு புறங்களிலும், தேவாலயத்தின் உள் அறைகளும், பீடம் மற்றும் மாதா சொரூபம் வைக்கப்பட்டுள்ள அறைகள் சிதிலம் அடைந்து இருப்பதை கண்டறிந்தனர்.

மேலும், இந்த அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு விரைவில் அளிக்கப்பட இருப்பதாக அந்த குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்