பூந்தமல்லி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு - மனைவி, மகள் உள்பட 4 பேர் காயம்

பூந்தமல்லி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். அவருடைய மனைவி, மகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-04-19 05:55 GMT

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 38). தற்போது இவர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் குடும்பத்துடன் தங்கி, ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி ரோசினி (30). இவர்களுடைய மகள் நவந்திகா (8). கடந்த மாதம் மாரியப்பனின் தந்தை இறந்து விட்டார். அவருடைய 30-வது நாள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரியப்பன் தனது மனைவி, மகளுடன் சொந்த ஊருக்கு சென்று இருந்தார்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய மனைவி, மகள் மற்றும் உறவினரின் மகள்களான நிரஞ்சனா (18), ரூப தர்ஷினி (17) ஆகியோருடன் காரில் கும்மிடிப்பூண்டிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். காரை மாரியப்பனே ஓட்டினார்.

நேற்று அதிகாலை வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகே சென்றபோது மாரியப்பன் தூக்க கலக்கத்தில் இருந்ததால் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

காரில் இருந்த மாரியப்பன் உள்பட 5 பேரும் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காயம் அடைந்த அனைவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிசிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மனைவி, மகள் மற்றும் உறவினர் மகள்கள் 2 பேர் என 4 பேரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் வானகரம் ஓடமா நகர் அருகே நள்ளிரவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது புழல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?, அவர் மீது மோதிய வாகனம் எது? என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்