வெள்ளியணை ஊராட்சியில் மின்கோபுரம் அமைக்க கூடாது: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வெள்ளியணை ஊராட்சியில் மின்கோபுரம் அமைக்க அனுமதிக்க கூடாது என மனு அளித்தனர்.;
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 297 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 58 மனுக்கள் பெறப்பட்டன.
விவசாயிகள் பாதிப்பு
கிருஷ்ணராயபுரம் வட்டம், சிந்தலவாடி, மகிளிபட்டி பொதுமக்கள் சார்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கோவிலுக்கு சொந்தமான புன்செய் விவசாய நிலம் சுமார் 100 ஏக்கர் உள்ளது. இந்த நிலத்தில் குறிப்பிட்ட நபர்கள் குத்தகை செலுத்தி வருகிறோம். மீதியான நிலத்திற்கும் குத்தகை கட்ட தயாராகவும் உள்ளோம். ஆனால் அரசு செயல் அலுவலர் நிலத்தை சர்வே செய்து அனுபவித்த நபர்களிடம் மீதியான இடத்திற்கும் குத்தகை ரசீது போட்டு தருகிறேன் என்றார்கள்.
ஒரு ஆண்டிற்கு ஏக்கருக்கு ரூ.1000 வீதம் 3 வருடத்திற்கு கட்ட வேண்டும் என்றார்கள். அதற்கும் நாங்கள் சம்மதித்தோம். ஒருவாரம் கழித்து ரூ.2 ஆயிரம் கட்ட வேண்டும் என்றார்கள். அதற்கும் நாங்கள் சம்மதிக்கிறோம். மறுபடியும் அவர்கள் ரூ.3 ஆயிரம் கட்ட சொன்னார்கள். அப்படி கட்டினாலும் 13.7.2022-ந் தேதி அது பொது ஏலமாகதான் அறிவிக்கப்படும் என்கிறார்கள். இதனால் சிறு விவசாயிகளாகிய நாங்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலையில் உள்ளோம். எனவே எங்களுக்கு உரிய விதத்தில் ஆய்வு செய்து விவசாயிகளாகிய எங்களையும், குடும்பத்தையும் வாழவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மின்கோபுரம்
கரூர் மாவட்ட பா.ஜ.க. செயலாளர் சக்திவேல் முருகன் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவிலுக்கு அருகில் தேர் கோவிலை சுற்றி வந்து நிறுத்தும் இடத்திற்கு மிக அருகில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் தனியார் காற்றாலை மின்உற்பத்தி நிறுவனம் உயர் அழுத்த மின்சாரம் செல்லும் கோபுரத்தை அமைக்க முயற்சி செய்து வருகிறது.
மேலும் இக்கோவிலுக்கு அருகில் இருக்கும் மழை நீரோடையில் தகுந்த அனுமதி இன்றி மின் கோபுரம் அமைக்கும் பணியை செய்து வருகிறார்கள். எனவே தனியார் நிறுவனம் மின்கோபுரம் அமைக்கும் பணியை செய்ய அனுமதிக்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நிலையான கட்டிடம்
கரூர் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- ஓய்வு பெற்ற நலச்சங்கத்திற்கு கட்டிடம் இல்லாததால், சங்கத்தை வாடகை கட்டிடத்தில் வாடகை கொடுத்து நடத்தி வருகிறோம்.ஆகவே சங்கத்திற்கு நிலையான கட்டிடம் கட்டுவதற்கு ஒரு இடத்தை தேர்வு செய்து சங்கத்திற்கு கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.