தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Update: 2023-01-10 12:40 GMT

திருப்பூர்

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் ஜாதகம் சரியில்லை என்று திருமணம் தள்ளிப்போனதால் திருப்பூரில் தினசரி மார்க்கெட் வளாகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதமும் சிக்கியது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தூக்கில் தொங்கினார்

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகன் சவுந்தர்ராஜன் (வயது 27). இவர் திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டில் கறிக்கோழிக்கடையில் வேலை செய்து வந்தார்.

சவுந்தர்ராஜன் கறிக்கோழிக்கடையிலேயே தங்கியிருந்தார். இந்தநிலையில் நேற்று காலை சென்று பார்த்தபோது அவர், கறிக்கோழிக்கடைக்கு அருகே திறந்து கிடந்த கடையில் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

கடிதம் சிக்கியது

சவுந்தர்ராஜன் சட்டைப்பையில் கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், 'எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். ஜாதகத்தை காரணம் காட்டி திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார்கள். எனது காதலியை மறந்து என்னால் வாழ முடியவில்லை. தங்கையை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்' என்று எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சவுந்தர்ராஜன் தனது உறவினர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு 2 மூத்த சகோதரிகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் முடித்து விட்டு திருமணம் செய்து கொடுப்பதாக கூறி வந்துள்ளனர். சமீபத்தில் அந்த பெண்ணுக்கும், சவுந்தர்ராஜனுக்கும் ஜாதகம் சரியில்லை என்றும், அதனால் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சவுந்தர்ராஜன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மார்க்கெட் வளாகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

------

Tags:    

மேலும் செய்திகள்