டி.கல்லுப்பட்டியில் பரிதாபம்-சோப்பு நீரை குடித்த ஒரு வயது குழந்தை சாவு

டி.கல்லுப்பட்டியில் வாளியில் இருந்த சோப்பு தண்ணீரை குடித்த ஒரு வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2023-07-09 20:23 GMT

பேரையூர்

டி.கல்லுப்பட்டியில் வாளியில் இருந்த சோப்பு தண்ணீரை குடித்த ஒரு வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

சோப்பு தண்ணீரை குடித்தது

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் அய்யர். இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு யாழினி(வயது 3), ஹரிணி(1) என 2 பெண் குழந்தைகள். கும்பகோணத்தில் உள்ள ஜவுளி கடையில் அய்யர் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை ராமலட்சுமி வீட்டில் துணிகளை துவைப்பதற்காக வாளியில் சோப்பு பவுடரை போட்டு ஊற வைத்துவிட்டு துணி தைத்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை ஹரிணி குளியல் அறைக்கு தவிழ்ந்து சென்று வாளியில் ஊற வைத்திருந்த தண்ணீரில் விளையாடியது. அப்போது அந்த சோப்பு நீரை அள்ளி குடித்தது.

இந்தநிலையில் திடீரென்று குழந்தையின் இருமல் சத்தம் கேட்டதால், ராமலட்சுமி ஓடிச்சென்று பார்த்தார். அப்போது குழந்தை இருமிக் கொண்டு இருந்ததுடன், சிறிது நேரத்தில் மயக்க நிலைக்கு சென்றது.

சாவு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக பேரையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்துவிட்டு வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறினர். ஹரிணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சோப்பு தண்ணீரை குடித்து 1 வயது குழந்தை இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்