வேடசந்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் பாய்ந்த ஆம்னி பஸ்
வேடசந்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் ஆம்னி பஸ் பாய்ந்தது.
பெங்களூருவில் இருந்து, தேனி மாவட்டம் கம்பம் நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. அந்த பஸ்சை, கம்பத்தை சேர்ந்த இன்னாசி (வயது 57) ஓட்டினார். பஸ்சில், 24 பயணிகள் பயணம் செய்தனர். கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூரை அடுத்த காக்காத்தோப்பு பிரிவு அருகே நேற்று காலை பஸ் வந்து கொண்டிருந்தது.
இதேபோல் திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் திடீரென நான்கு வழிச்சாலையில் இருந்து சர்வீஸ் ரோட்டுக்கு செல்வதற்காக திரும்பியது. அந்த சமயத்தில் நான்கு வழிச்சாலையில் வந்த ஆம்னி பஸ், அரசு பஸ் மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ், தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் சாலையோரத்தில் இருந்த 10 அடி பள்ளத்துக்குள் தலைகீழாக பாய்ந்தது.
இந்த விபத்தில் சிக்கிய பயணிகள் அய்யோ, அம்மா என்று அபயகுரல் எழுப்பினர். கண்இமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்த விபத்தில் டிரைவர் இன்னாசி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் காயம் அடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகளை வேறு பஸ்சில் ஏற்றி அவர்களது ஊருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ், கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.