தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது

குமரி போலீஸ்காரர் கொலை உள்பட பல்வேறு வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை நெல்லை தனிப்படையினர் கைது செய்தனர்.

Update: 2023-10-21 22:19 GMT

தமிழகத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்தவகையில் குமரி மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தலைமறைவு குற்றவாளிகளை தேடி பிடித்து கைது செய்து வருகிறார்கள்.

அதன்படி சமீபத்தில் பிரபல ரவுடி செந்தில், வெள்ளை செந்தில், நாகராஜன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல் தமிழகத்தையே உலுக்கிய பிரபல ரவுடி லிங்கம் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த புதுகுடியிருப்பை சேர்ந்த செல்வம் என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர். இவ்வாறு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருக்கும் ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் ஜெகநாதன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள விளாத்திவிளையை சேர்ந்த கண்ணன் என்ற ஜிம் கண்ணன் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் மீது ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் அடிதடி வழக்குகள் உள்ளன. மேலும் நெல்லை, சென்னை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

ஜெகநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணன் ஜாமீனில் விடுதலை ஆனார். இதேபோல் நெல்லை மாவட்டம் பழவூர் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றிலும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்தநிலையில் நெல்லை மாவட்ட தனிப்படை போலீசார் பழவூரில் வைத்து கண்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்