4 வழிச்சாலை பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி திருபுவனையில் தாக்கப்பட்டார்; 3 பேருக்கு வலைவீச்சு

திருபுவனையில் வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல் நடத்திய 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-03-05 04:32 IST

4 வழிச்சாலை பணி

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் ராஜ் (வயது 23). இவரது நண்பர் ரோஷன். இவர்கள் புதுவை திருபுவனை பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக தங்கி இருந்து 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராகேஷ் ராஜ் பணியில் இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென ராகேஷ் ராஜை தாக்கியதுடன் வட மாநிலத்தினர் இங்கு பணி செய்யக்கூடாது என்று மிரட்டியதாக தெரிகிறது.

இதில் அவருக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலிதாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு பணியில் இருந்த வடமாநிலத்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

சொந்த ஊருக்கு புறப்பட்டனர்

இதைப்பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த ராகேஷ் ராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகேஷ் ராஜ் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தமிழகத்தில் வடமாநிலத்தினர் மீது தாக்குதல் நடத்தியது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவியதாலும் புதுவையில் ஒருவர் தாக்கப்பட்டதாலும் அதிர்ச்சியடைந்த 100க்கும் மேற்படட வடமாநிலத்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் குடும்பம் குடும்பமாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

போலீசார் உறுதி

இதுபற்றி தெரியவந்ததும் திருபுவனை மற்றும் வளவனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று புதுச்சேரியில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். சமூக வலைதளத்தில் பரவும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம். காவல்துறை உங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும். திருபுவனை பகுதியில் பீகார் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். இதை கேட்டு சமாதானம் அடைந்த வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் முடிவை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்