காதல் திருமணம் செய்த புதுப்பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார்

பேரணாம்பட்டு அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-05 17:59 GMT

பேரணாம்பட்டு அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

காதல் திருமணம்

பேரணாம்பட்டு அருகே உள்ள ரங்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, கூலித் தொழிலாளி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது19). அதே கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் ஸ்ரீதர் (21). செங்கல் அறுக்கும் தொழிலாளி. இவருக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணமாகி 3 மாதங்களாகிறது. திருமணமானது முதல் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் புதுப்பெண் ராஜேஸ்வரி அதே கிராமத்திலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கிணற்றில் பிணமாக கிடந்தார்

இதனால் ராஜேஸ்வரி தனது கணவன் வீட்டிலிருந்து கடந்த 3-ந் தேதி காலை காணாமல் போனதாக கூறப்படுகிறது. எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் அதே கிராமத்திலுள்ள கணபதி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ராஜேஸ்வரி பிணமாக கிடப்பது நேற்று தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரணாம்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி, பேரணாம்பட்டு தீயணைப்பு படையினர் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாவில் சந்தேகம்

இதுகுறித்து ராஜேஸ்வரியின் தாயார் சசிகலா பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார்செய்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ராஜேஸ்வரிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால், அவருடைய சாவுக்கான காரணம் குறித்து குடியாத்தம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்